விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:



விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.



மு.வரதராசனார் உரை:



வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.



சாலமன் பாப்பையா உரை:



மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.



பரிமேலழகர் உரை:



விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).



மணக்குடவர் உரை:



வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.



திருக்குறளார் வீ. முனிசாமி உரை:



மேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும்.



Translation:



If from the clouds no drops of rain are shed. 'Tis rare to see green herb lift up its head.



Explanation:



If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.